
கருத்தியல் ரீதியாக அமெரிக்காவையே இரண்டாக பிரிய வைத்த அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்பை பதவியிலிருந்து நீக்கும் ஜனநாயக கட்சியினரின் முயற்சி தோல்வியில் முடிவடைந்துள்ளது.
அமெரிக்காவின் 45ஆவது அதிபரான டிரம்பின் குடியரசு கட்சியினர் பெரும்பான்மை வகிக்கும் செனட் சபையில் நடந்த, டிரம்புக்கு எதிரான பதவிநீக்க தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நடந்தது.
அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துதல் மற்றும் நாடாளுமன்ற நடவடிக்கைக்கு முட்டுக்கட்டையாக இருத்தல் ஆகிய இரு குற்றச்சாட்டுகளில் முறையே 52-48, 53-47 என்ற வாக்குகளின் அடிப்படையில் தோல்வி அடைந்தது.
இந்தாண்டு நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடவுள்ள ஜோ பிடன் மற்றும் அவரது மகன் ஹண்டர் பிடன் மீது ஊழல் விசாரணை நடத்துவதற்கு உத்தரவிடுமாறு உக்ரைன் அதிபருக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அழுத்தம் கொடுத்ததாக கூறி கடந்த டிசம்பர் மாதம் இந்த பதவிநீக்க விசாரணையை ஜனநாயக கட்சி முன்மொழிந்திருந்தது.
வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவதன் மூலம், பதவிநீக்க நடவடிக்கைக்கு உட்பட்டு அதன் பிறகு மீண்டும் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் அமெரிக்காவின் முதல் அதிபராக டொனால்டு டிரம்ப் உருவெடுத்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது சாட்டப்பட்ட இரண்டில் ஒரு குற்றம் நிரூபிக்கப்பட்டிருந்தாலும் அவர் தனது பதவியை இழந்திருப்பார். ஒருவேளை அப்படி நடந்திருந்தால் அமெரிக்காவின் அதிபராக தற்போதைய துணை அதிபர் மைக் பென்ஸ் பதவியேற்றிருப்பார்.
ஏற்கனவே நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் பதவிநீக்கத் தீர்மானம் நிறைவேறியிருந்தது குறிப்பிடத்தக்கது.