அமெரிக்கா – சீனா இடையே புதிய வர்த்தக ஒப்பந்தம் – அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

சீனா மற்றும் அமெரிக்காவுக்கு இடையே புதியதொரு வர்த்தக ஒப்பந்தம் ஒன்று ஏற்பட்டுள்ளது.

இது சீனா மற்றும் அமெரிக்காவுக்கு இடையே நடைபெற்று வந்த வர்த்தக போரால் ஏற்பட்ட பதற்றத்தை தணிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஒப்பந்தம் அமெரிக்காவின் பொருளாதாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இது இருநாடுகளுக்கும் நன்மையளிக்கும் ஒரு ஒப்பந்தம் என்றும், இதனால் இருநாடுகளுக்குமான உறவு மேம்படும் என்றும், சீனா தெரிவித்துள்ளது.

சீனாவில் அமெரிக்கா இறக்குமதி செய்யும் பொருட்களின் மதிப்பு 200பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயரும் எனவும், அறிவுசார் சொத்து தொடர்பான விதிமுறைகள் வலிமைப்படுத்தப்படும் எனவும் சீனா உறுதியளித்துள்ளது.

அதற்கு பதிலாக அமெரிக்கா, சீனப் பொருட்கள் மீது விதித்த தடையை பாதியாக குறைப்பதாக தெரிவித்துள்ளது.

இந்த ஒப்பந்தம் இருநாடுகளுக்கும் இடையே உள்ள பதற்றத்தை குறைக்கும் என்றாலும், அடுத்தக்கட்ட நடவடிக்கையில் உடனடியாக இறங்க வேண்டும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2018ஆம் ஆண்டு அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய இருநாடுகளும் மாறிமாறி வரிகளை விதித்து பழிக்கு பழி வாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டன.

இதன்விளைவாக பொருட்களின் மீது 450பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் அதிகமான இறக்குமதி வரி விதிக்கும் நிலை ஏற்பட்டது.

இந்த பிரச்சனையால், இருநாடுகளுக்குமான வர்த்தக நடவடிக்கையில் பாதிப்பு ஏற்பட்டதுடன், உலக பொருளாதார வளர்ச்சியும் பாதிக்கப்பட்டது.

முதலீட்டாளர்களையும் கலக்கத்தில் தள்ளியது.

வலிமைபெறும் உறவு

இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட டிரம்ப், இதன்மூலம் இருநாடுகளுக்குமான உறவு வலிமை பெறும் என தெரிவித்தார்.

“இருநாடுகளும் சேர்ந்து கடந்த காலத்தில் செய்த தவறுகளை சரியாக்குகிறோம். மேலும் எதிர்காலத்திற்கான பொருளாதாரத்திற்கான பாதுகாப்பை இது வழங்கும்,” என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த ஒப்பந்தத்தால் உலக அமைதி மேம்படும் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இந்த ஒப்பந்தத்தில் என்ன உள்ளது?

சீனா அமெரிக்க இறக்குமதி பொருட்களின் அளவை 200பில்லியன் அமெரிக்க டாலராக உயர்த்துவதாக உறுதியளித்துள்ளது.

போலி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சீனா தெரிவித்துள்ளது. மேலும் ரகசியமாக நடத்தப்படும் திருட்டு குறித்து நிறுவனங்கள் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கும் வழிமுறைகள் எளிமையாக்கப்படும் எனவும் சீனா தெரிவித்துள்ளது.

சுமார் 360பில்லியன் சீனப் பொருகள் மீது 25% வரை வரி விதிப்பு என்ற அளவை அமெரிக்கா மேற்கொள்ளும், அதேபோல் 100பில்லியன் அமெரிக்க பொருட்கள் மீது சீனா புதிதாக விதித்த வரிகளில் பெரும்பாலும் எந்த மாற்றமும் இருக்காது.

“தங்களின் நாட்டின் நிலைக்கு பொருந்தக் கூடிய ஒரு அரசியல் அமைப்பையும், பொருளாதார வளர்ச்சி மாதிரியையும் சீனா உருவாக்கியுள்ளது.”

“அதற்காக சீனா மற்றும் அமெரிக்கா ஒன்றாக பணியாற்ற முடியாது என்று அர்த்தமில்லை,” என சீனாவின் துணை பிரதமர் லீயோ க தெரிவித்துள்ளார்.

சீனா நெறிமுறையற்ற வர்த்தக முறைகளை கடைப்பிடிப்பதாக அமெரிக்க குற்றம்சுமத்தியிருந்தது. உள்ளூர் வர்த்தகங்களுக்கு மானியங்கள் வழங்குவது மற்றும் அமெரிக்க நிறுவனங்கள் சீனாவில் செயல்படுவதை கடினமாக்குவது போன்ற நடவடிக்கையில் சீனா ஈடுபடுவதாகவும் அமெரிக்கா குற்றம் சுமத்தியிருந்தது.

முகநூலில் நாம்