அமெரிக்காவை மிரட்டும் கொரோனா வைரஸ்- இதுவரை 26 பேர் பலி

சீனாவின் வுகான் நகரில் உருவான கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. சீனாவில் நேற்று மேலும் 17 பேர் பலியானதை அடுத்து அங்கு உயிரிழப்பு 3136 ஆக உயர்ந்துள்ளது. உலக அளவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 4011 ஆக உயர்ந்துள்ளது. 


சீனாவை தொடர்ந்து இத்தாலி, தென் கொரியா மற்றும் ஈரானில் வேகமாக பரவிய கொரோனா வைரஸ் தொடர்ந்து உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. அமெரிக்காவிலும் கொரோனா பாதிப்பு நாள் தோறும் அதிகரித்து வருகிறது. நியூயார்க், கலிபோர்னியாவில் சுகாதார அவசர நிலை ஏற்கனவே பிரகடனப்படுத்தப்பட்டு இருந்தது. 

நேற்று மேலும் 4 பேர் பலியானதால் உயிரிழப்பு 26 ஆக உயர்ந்துள்ளது. மொத்தம் 717 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அமெரிக்காவின் 36 மாநிலங்களில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் ஒரேகான் உள்ளிட்ட 8 மாநிலங்களில் சுகாதார அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.


வெள்ளை மாளிகை பணியாளர்கள் குழு தலைவரும் வடக்கு கரோலினா பிரதிநிதியுமான மார்க் மீடோஸ் தனிமைப்படுத்தப்பட்டு அவரது உடல்நிலை கண்காணிக்கப்படுகிறது. கொரோனா பாதிப்பு உள்ள நபருடன் அவர் தொடர்பில் இருந்ததால் அவருக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டது. அதில், அவருக்கு எந்த பாதிப்பும் இல்லை என உறுதி செய்யப்பட்டது. எனினும், முன்னெச்சரிக்கையாக புதன்கிழமை வரை அவர் வீட்டில் வைத்து கண்காணிக்கப்படுகிறார். 

முகநூலில் நாம்