அமெரிக்காவில் நாயின் வாயை கட்டிப்போட்டவருக்கு தண்டனை

அமெரிக்க நாட்டின் புளோரிடா மாகாணம், லேஹி ஏக்கர்ஸ் என்ற இடத்தில் கடந்த மாதம் சான்ஸ் என்று அழைக்கப்படுகிற தெருநாய் ஒன்று, நாடாவால் வாய் கட்டப்பட்டு, தண்ணீர் கூட குடிக்க வழியின்றி, தொண்டை வறண்டு, மூச்சு திணறிய நிலையில் இருந்ததை விலங்கு கட்டுப்பாட்டு அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.


அதன்பின்னர் நாயின் வாயில் கட்டப்பட்டிருந்த அந்த நாடாவை அவிழ்த்து விட்டு தண்ணீர் கொடுத்தனர். அதைத் தொடர்ந்து லீ கவுண்டி ஷெரீப் கேர்மைன் மார்சினோ அந்த நாயை தத்தெடுத்துக்கொண்டார். இப்போது அந்த நாய், ஷெரீப் அலுவலகத்தின் சமூக உறவு பிரிவின் ஒரு அங்கமாக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே நாயின் வாயைக் கட்டிப்போட்டது யார் என நடத்திய விசாரணையில் ஆஸ்கார் லீ தாம்ப்சன் என்ற 19 வயது வாலிபர் சிக்கினார். அவருடைய கைரேகைகளையும், நாயின் வாயில் கட்டப்பட்டிருந்த நாடாவில் பதிவாகி இருந்த கைரேகைகளையும் தடயவியல் அறிவியல் பரிசோதனைக்கு உட்படுத்தினர்.

அதில் இரண்டும் பொருந்தியதை கண்டுபிடித்தனர். இதையடுத்து தாம்ப்சன் மீதான வழக்கை விசாரித்த கோர்ட்டு, அவரை குற்றவாளி என கண்டறிந்து தண்டித்து, 5 ஆண்டு காலம் நன்னடத்தை மேற்பார்வையில் வைத்து கண்காணிக்க உத்தரவிட்டது.

முகநூலில் நாம்