அமெரிக்காவின் டென்னிசி மாநிலத்தை தாக்கிய சூறாவளி- 25 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவின் தெற்கு பகுதியில் உள்ள டென்னிசி மாநிலத்தில் நேற்று கடுமையான சூறாவளி தாக்கியது. அதிவேகத்தில் சுழன்றடித்த இந்த சூறாவளியால் ஏராளமான கட்டிடங்கள் சேதமடைந்தன. பல வீடுகளின் கூரைகள் முழுவதும் சூறாவளியில் சிக்கி பறந்தன. 


மின்கம்பங்கள் மற்றும் மரங்கள் சாய்ந்தன. இதனால் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் தடைபட்டது. பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கி கிடந்தனர்.  சாலைகளில் நின்ற வாகனங்கள் மற்றும் விமானங்களும் சூறாவளியின் பிடியில் இருந்து தப்பவில்லை. சாலைகளில் ஆங்காங்கே வாகனங்கள் கவிழ்ந்து கிடந்தன.

சூறாவளியில் சிக்கியும், கட்டிட இடிபாடுகளில் சிக்கியும் 25 பேர் பலியாகி உள்ளனர். சுமார் 150 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

சூறாவளியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை வெள்ளிக்கிழமை நேரில் சென்று பார்வையிட உள்ளதாக அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். பாதிக்கப்பட்டவர்களுக்காக பிரார்த்தனை செய்வதாகவும், அவர்களுக்கு உரிய உதவிகள் செய்யப்படும் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

முகநூலில் நாம்