அச்சுறுத்தல்களுக்கு எதிராக முல்லைத்தீவில் கவனயீர்ப்பு போராட்டம்

மனித உரிமை செயற்பாட்டாளர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், நிறுவன பணியாளர்கள் உள்ளிட்ட தரப்புகள் மீது அரச புலனாய்வு பிரிவினர் உள்ளிட்ட பல்வேறு தரப்புகளினாலும் ஏற்படுத்தப்படுகின்ற அச்சுறுத்தல்களுக்கு எதிராக முல்லைத்தீவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவினுடைய ஏற்பாட்டிலே இன்று (14) காலை 10 மணி அளவில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்ட இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில் பணியாற்றி வருகின்ற மனித உரிமை செயற்பாட்டாளர்கள், மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பணியாளர்கள்,பொதுமக்கள் மற்றும் சமூக செயற்பாடுகளில் ஈடுபடுகின்ற பல்வேறு தரப்பினர்கள் கலந்துகொண்டு பாதுகாப்பு படையினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர்களாலும் முன்னெடுக்கப்படுகின்ற அச்சுறுத்தல் செயல்பாடுகளை நிறுத்த கோரியும் ஐக்கிய நாடுகள் சபையிலே இது தொடர்பில் இறுக்கமான முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என தெரிவித்தும் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக இந்த போராட்டத்திலே பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கு, எமது நிலம் எமக்கு வேண்டும், நடமாடும் சுதந்திரம் எங்கள் உரிமை, வடக்கு மற்றும் கிழக்கில் மனித உரிமை பாதுகாவலர்களை அச்சுறுத்துவதை நிறுத்து, தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய், மனித உரிமைகளை பாதுகாத்து மேம்படுத்து, கருத்து சுதந்திரம் எங்கள் உரிமை, சிவில் சமூக அமைப்பினரை விரட்டாதே, உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை தாங்கியவாறு பல்வேறு கோஷங்களை எழுப்பிய வாறும் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களையும் புகைப்படம் மற்றும் காணொளி எடுத்து அச்சுறுத்தும் செயற்பாடுகளில் புலனாய்வாளர்கள் ஈடுபட்டதையும் இந்த அச்சம் காரணமாக போராட்டத்தில் ஈடுபட்ட சிலர் தலைக்கவசங்களுடன் தங்களது முகங்களை காட்டாது போராட்டத்தில் ஈடுபடத்தையும் அவதானிக்க முடிந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்